Tuesday, December 20, 2005

அந்த ஓவியம் என்னுடையதல்ல.......





















என் விம்பத்தை
நானே ஓவியமாக வரைவதற்கு
தூரிகையை எடுத்து நானே
தீட்ட ஆரம்பித்தேன்!

கண்களில்
ஒரு காந்தத் தன்மை
தெரியவே வரைந்தேன்.

என் தோழி சொன்னாள்
"கொஞ்சம் கண்ணை
சொக்க வைப்பது போல் வரை"
வரைந்தேன் நானும் அப்படியே!

உதடுகளை
சிறிய வில் போன்று வரைந்தேன்
என் தோழி சொன்னாள்
"கொஞ்சம் நீட்டு" என்று
இசைந்தேன் நானும் அஃதே!

முகமதை வரைந்தேன்
வட்ட நிலா சாயலில்
உரைத்தாள் தோழியவள்
"நீள்வட்ட அகம்" என்று
சம்மதத்துடன் தலை வணங்கியது
என் கை தூரிகை!

நெற்றியோடு நேர்கோடிட்டு
உச்சி பிளந்து வார்ந்தெடுத்து
நீள்வட்ட முகம் களைகட்ட பின்னலிட்டேன்
தோழி சொன்னாள்... இது நீட்டு முகம்
கூந்தலையும் கலைத்துவிடு என்று
அதையும் செய்து விட்டேன்......

சங்கு கழுத்தில்
ஓர் தங்க ஆபரணம்
அணிவிக்க கூறி
அடம்பிடித்தாள்
அதையும் அணிவித்தேன்!

இப்போது மேலும் கீழும்
அசைத்தும் அசைக்காமலும்
உற்றுப்பார்த்தேன் அது
என் எண்ணங்களை விட்டெறிந்த
உண்மையை உணர்ந்து கொண்டேன்

உண்மை தெரிந்தும்
பேச மறுத்த ஓவியத்தைப் போன்றே
நானும் ஊமையானேன்.

அன்புடன்
சிந்து............

4 Comments:

Blogger மு மாலிக் said...

நல்ல கருத்து நிறைந்த கவிதை.

2:51 PM  
Blogger Unknown said...

வாழ்க்கை என்பது சமரசம் சார்ந்த விஷயம்....சமரசமே வாழ்க்கை என்னும் போது.... இதோ உங்கள் கவிதை மீதியைச் சொல்லும்....

6:03 AM  
Blogger கீதா said...

அருமை!

உங்கள் கவிதை படித்ததும் எனக்கு சிறுவயதில் படித்த ஒரு ஆங்கிலச் சிறுகதை நினைவுக்கு வருகின்றது.

அதில் நாயகன் தன்னை புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பி அத்தகைய ஒரு இடத்திற்கு சென்றான். புகைப்படம் வாங்கச்சென்றபோது அந்த படம் அவனைப்போலவே இருக்காது..

புகைப்படக்காரரிடம் விளக்கம் கேட்டபோது அவன் சொன்னான். உங்கள் புருவம் சரியில்லை அதை சரிபடுத்தினேன்.. தலைமுடியை கொஞ்சம் செதுக்கினேன்.. மூக்கு நீளமாக இருந்தது கொஞ்சம் சுருக்கினேன்.. உதடு அகலமாக இருந்தது அதை குறைத்தேன்.. என்று சொல்லிக்கொண்டே போவான்..

ஆக அது அவன் புகைப்படம் இல்லை..

கடைசியில் நாயகன் என்ன சொல்வான் தெரியுமா..

எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.. நான் இந்த முகத்துடன் இவ்வுலகில் 20 வருடம் வாழ்ந்துவிட்டேன். இனியும் இதனுடன் தான் வாழ்வேன் என்று.

:)

அன்புடன்
கீதா

5:48 AM  
Blogger சிந்து said...

நன்றிகள் malik, Dev, கீதா உங்கள் வருகைக்கு தருகைக்கும். இதோடு இனைந்திருங்கள்.

2:20 PM  

Post a Comment

<< Home