Monday, January 30, 2006
Sunday, January 29, 2006
Friday, January 27, 2006
Tuesday, January 24, 2006
பசி

நெய்தலிலே
கொய்த மலராய்
எம் ஒருசாண் வயிற்றுனுள்ளே
நீ இருப்பாய்.
நேரம் வந்ததும்
வயிற்றினுள்ளே
கரகாட்டமாட தொடங்கிடுவாய்.
சட்டியில் இருப்பதுவோ
உனக்குத் தெரிந்திடாது -ஆனாலும்
உலர்ந்திடும் உனக்கு
உரமிட வேண்டும்!
நீயிருப்பதால் தான்
நாம் வாழுகிறோம்
நீயிருப்பதால் தான்
நாம் இம்மண்ணில்
இருப்பதை உணர்கின்றோம்!
எல்லோரிடமும் இருப்பாய்
எல்லோரையும் கட்டியாள்வாய்
எவ்வேலை இருப்பினும்
உனை மறந்திட்டோர் உண்டோ?
உன்னால் நாம் இயங்குகிறோம்
எம்மால் நீ இயங்குகிறாய்
இது இயற்கையின் நியதி
இறைவனின் கட்டளை!

Saturday, January 21, 2006
நீயும் நானும்.

பட்டாம் பூச்சியாய்
பருவமகள் இதயம் அது
பட படக்க……….
பார்த்த விழியிரண்டும் பூத்திருக்க
பசுமையான நினைவளைகளை சுமந்து
தன் பந்தங்களை மறந்து
பாசத்திற்குரிய புதிய உறவை
பார்த்திட காத்திருக்கின்றாள்
வானம் விரிந்து கிடக்கிறது
பூமி பரந்து கிடக்கிறது
காற்று கட்டி அணைக்கிறது
வா..... என்னருகில்
பற்றுடன் பழகிய
அவ்வுறவு
பரிதவிக்க விட்டிடுமா இன்று
பந்தமாய் தன்னுறவில் சேர்ந்திட
பாதி வலி மறைந்திட
மீதி வழியினைத் தேட
தன் துணையைத் தேடிட
வாழ்விற்கு அணைகட்டிட
முனைப்புடன் ஈடுபட்ட உள்ளம்
முறிந்து போக விரும்புமா ?
முத்தங்களால் பூஜித்த
முறை உறவு அது
முறிந்து போகாது
நாணம் நிறைந்த உன்
இதயப் போர்வையை கழற்றி விடு !
என் இறுக்கமான அரவணைப்புக்குள் கலந்து விடு
எமக்குள் பல்லாயிரம் நட்சத்திரங்களில்
வெளிச்சம் உண்டு !
எமக்குள் பிரமாண்டமான
சூரியனின் வெப்பமும்
எரிமலையின் கொதிப்பும்
பௌர்ணமி கடலின்
ஈர்ப்பும் உண்டல்லவோ
எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்
நீயும் நானும்
பரிமாறுவோம்
வந்து விடு………….

Sunday, January 15, 2006
பத்திரிகை.

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான் -இந்த
பாரில் துயில்வோர்
கண்ணில் பாய்ந்திடும்
எழுச்சியும் நீ தான்!
ஊர்களைக் காட்டி - இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பிறந்திட்ட ஆசான் நீ!
மனிதர்களின் இதய ஓடையில்
ஆழநீர் ஊற்றாக
உன்னை நீ காட்டி
மக்கள் எண்ணம் செழித்திட
நீராக நீ வந்தாய்!
குறுகிய செயல்களை ஒன்று சேர்த்து
குல விளக்காய் ஒளிர செய்கிறாய்!
போர் முகில் விலக்கி செல்ல
போர்க்களம் செல்லும்
தூதுவர் போல்
உன் மக்கள் மனம் காண
நீ வந்தாய்!
படித்தவர்கள் எல்லாம்
உன்னிடம் தஞ்சம் புகுத்த
நீ வந்தாய்!
வானில் நிகழும் கோடி மாயங்கள்
மானிலத்தில் நடக்கும் சம்பவங்கள்
அத்தனையும் திரட்டி
உண்மை நிறைந்த சேதிகளை
தித்திப்பாய்த் தர
நித்தமும் நீ வந்தாய்!
சிறுகதைகள் சொல்லி
பெருமையூட்டும் அறிவுஜீவியே
அறைதனில் நடக்கும்
அகச் செயலைகளை
அம்பலத்திற்கு ஏற்றி
கயவர்கள் முகத்திரையை
கிழித்தெரிவதில்
உனக்கு நிகர் தான் யார்?
கலை உலகிலே
ஊக்கம் செய்வாய்
ஓவியம் தருவாய்
சிற்பம் உணர்விப்பாய்
கவிதை தருவாய்
காவியம் தருவாய்
கலகலவென சிரிக்கும்
விகடம் சொல்வாய்
நீயின்றி ஓர் அணு கூட
அசையாது இவ்வுலகில்
என்பதில் தான்
எத்தனை உண்மை
Tuesday, January 10, 2006
சொந்த மண்

தளிர்நடை பயின்று
தவழ்ந்து வந்த தரைக்கு
எந்தத் தங்கமும் நிகராகுமா?
அன்புத் தாய்
அருளாட்சி புரியும்
அரியவூராய்
பொலிகை மண்ணல்லோ
சொந்த இடமாம்
பொலிவுற்ற இடமதில்
பொன்னாக வளர்ந்தோம்
பொறுமையற்ற குணத்தால்
பொசுங்கிப் போனோம் இன்று
மண்ணுடன் உறவாடி
மடிதனில்
உட்கார முடியாது
வேகுகின்றோம் இப்போது
கடலோடி
மீன் தேடும்
மீனவர் கூட்டம்.....
மரம் ஏறி
வாழ்க்கைத் தரம் உயரும்
தொழிலாளிகள்......
சவரம் செய்து
வரம் பெறும்
தொழிலாளிகள்.....
மேளம் அடித்து
வளம் பெறும்
தொழிலாளிகள்.....
இன்னும்
எத்தனை....? எத்தனை...?
நம் சொந்த மண்
எதற்கும் ஈடாகாது............
Friday, January 06, 2006
வாழ்வு

கார்கால மேகத்தில்
போர்கோலம் பூண்டு தங்கும்
நீர்க்குமிழிபோல்
பாரினிலே நிலைப்பது வாழ்வல்லவோ!
அனலிடை மெழுகாய்
புனலிடை ஓடும் படகாய்
தீனமுடன் உலகில்
தவழ்வது வாழ்வல்லவோ!
பாலை வனத்திலே
பதிந்த தடங்களாய்
கடற்கரை மணலிலே
கட்டிய வீடுகளாய்
கரைவது வாழ்வல்லவோ!
நிலையற்ற வாழ்வெனினும்
நிம்மதியற்ற நிலையெனினும்
பூமலராய்
பாமலராய்
மணம் பரப்புவது வாழ்வல்லவோ!
நிமிட வாழ்வாயினும்
நித்திய சத்தியமாய்
இனித்திடும்
கற்கண்டல்லோ வாழ்வு!
மாந்தர் பலரிடை
வாழ்வினும்
வாழ்வென்றோர்
நிலை உள்ளது வாழ்வல்லவோ!
இணைப்பினும் வாழ்வு
சாவிலும் வாழ்வு
போரிலும் வாழ்வு
இதுவே வாழ்வு!
Sunday, January 01, 2006
சொல்லத் துடிக்குது மனசு......

சில நேரம் நான்
துள்ளி சிரிப்பது
வேடிக்கையாய்
இருக்கிறதா உனக்கு?
எண்ணித்தான்
பார்க்கிறேன் சகோதரியே........
எனக்குள் இருக்கும் ஏக்கங்களை
தேக்கி வைத்த காரணத்தை
சொல்லத்தான் துடிக்கிறேன்
துணிந்து சொல்லிடவா!
தூய்மையாய் எம் உறவில் ஏனென்று
நீண்டநேரம் விழியுறங்காமல்,
நிலைகுலைந்து விழிவீங்கி,
இரவினில் விழி கசிந்ததால்
யாருக்கு தெரியும் என் சோகம்
பல நாள் வாய் புலம்பி
என் நிழலில் மடிந்து சரிந்தேன்!
இரக்கமில்லாத என் பிறப்பால்
நீயும் நானும் ஓர் மடியில்
தான் தவழ்ந்தோம்
உனக்கு ஐந்து வயதுவரை
கிடைத்த பால்
எனக்குக் கிடைக்க வில்லையம்மா
அதுதான் உனக்கு ரோசம் அதிகமோ?
ஆனால்
நம் தாயின் மடியில்........
ஒன்றரை வயது வரை
நான் பால் அருந்தினேன்
உன்னோடு
மூன்று பிறப்பு உறிஞ்சிய
அவள் மடியில் பால் வர மறுத்ததும்
கடித்தேன் அவள் மடியை
துடித்தாள் தாயவள்
பால் வரவில்லை என்று
அவள் நமக்கு அன்னை என்பதால்.
அதே சினத்தை
உன்னிடம் கொண்டேன்
சினுங்கினேன்
முரண்பட்டேன்
உன் மடியில் சாய்ந்தேன்
எனக்கு அந்த அன்பு
உன்னிடம் கிடைக்கவில்லை
நான் மலரத்துடிக்கும் மொட்டம்மா
உன் வார்த்தைகளால்
நுனியிலே என்னை எரித்து விடாதே!
இப்போதல்லாம் என் மனம் அடிக்கடி
சஞ்சலம் கொள்கிறது
காரணம் கேட்டால்
சொல்லத் தெரியவில்லையம்மா.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3926
புது வருடத்திற்கு ஓர் மனு..............
புத்தாண்டே
நீயும் வருடந்தோறும்
வந்து கொண்டுதான்
இருக்கிறாய்
உருவம்
இல்லா உனக்கு
வண்ண வண்ண
மத்தாப்பு என்ன?
சீறி
எரியும் சீறு வாணம்
என்ன?
பூமித் தாயை
அதிர வைக்கும்
பட்டாசு என்ன?
உருவம் தெரியா உன்னை
அளவில்லா மகிழ்வோடு
உருவம் உள்ள ஜீவன்கள்
வரவேற்பு மாலை சூடுகிறார்
உயிர் இருந்தும்
உருவம் இருந்தும்
உடையின்றி
உணவுன்றி
உடைந்து கிடக்கும்
மனிதரை வரவேற்க
யார் உள்ளார்?
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3927