Wednesday, November 30, 2005

தொலைந்தான் எதிரி

எதிரி தானே வந்தான் போருக்கு -நம்
வீரர் கூட்டம் வேறுங்கே யாருக்கு?
போனால் கிடைக்கும் போரில்
அந்த எதிரியின் ஈரல்!

போர்க்களத்தில் எதிரிக்கு எக்காளம் - உடன்
புறப்படட்டும் அங்கே வீரர் பட்டாளம்
பார்க்கட்டும் அக் கொதுகு- நன்றாய்ப்
பழுக்கட்டும் அவன் முதுகு

எதிரிக்கு இங்கென்ன வேலை -நம் வீரர்
படை கிழிக்கட்டும் அவன் தோழை
தானாகவே வந்தான் கொழுத்து! -அவன்
தன் தலை இழந்தது கழுத்து!

தேனாய்ப் பேசித் திடீரென்று பாய்ந்தான் - நம்
வீரர்படை கண்டு மனம் ஓய்ந்தான்
எதிரி இனி இல்லை
இனிப் போனதவன் தொல்லை!

நாடுபிடிக்க எதிரி செய்த வஞ்சகம் - மிக
நன்றாக தெரிந்தது வையகம்
கோடு தாண்டப் பார்த்தால் - தன்
கொடியோடு எரிந்தே போவான்!

Tuesday, November 29, 2005

அனாதை




















கேட்பதற்கு நெஞ்சம் கனக்கிறது
நம் சமூகங்களில் இன்னும்
பட்டினிச் செல்வங்களின்
பட்டியலா?

வினாடிகள்
நிமிடங்களாகி
நிமிடங்கள்
மணித்தியாலங்களாகி
மணித்தியாலங்கள்
நாட்கள்ளாகி
நாட்கள்
வாரங்கலாகி
வாரங்கள்
மாதங்கலாகி
மாதங்கள்
வருடங்கலாகி
வருடங்கள் நம்
சமூகத்திற்கு
இன்னும்
விடியல் கொடுக்கவில்லை

நம் சமூகத்திற்கு தேவை
பிச்சை வாரிசுகள் இல்லை
சில மனசாட்சி உள்ள இதயங்கள்.

Saturday, November 26, 2005

மாவீரர்கள்

முடிவிலிப் போருக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு
முயன்று - வாழ்வில்
முற்றுப்பெற அனுபவிக்காமல்
முடிந்து போனவர்கள் நீங்கள்
முட்களுடன்
முட்டி மோதி
முதன்மையானவர்கள் நீங்கள்

மண்ணில் வந்த
மண்புழுக்கள் - எந்நேரமும்
மண்ணுடன் உறவாடும்.

அதுபோல.....
மானமுடன் வாழ்ந்த
மனிதன்
மானமுடன்
மரணிக்க நினைப்பது தப்பல்ல!

மலரினுள்
மறைந்திருக்கும்
மகரந்தத்தின்
மகிமையை

உலகிற்கே உணர்த்திடும்
வண்டுகள் போல் அல்லவோ
நீங்கள்

மாவீரர்களே உங்கள் பெருமையை.....
மரணத்தின் வாயிலில்
உணர்த்தி விட்டீர்கள்...
எமக்கு!

எங்கள் உயிரை காக்க
உங்கள் உயிரை இம்மண்ணில்
புதைத்தீர்கள்!

Friday, November 25, 2005

இது தானா புரட்சி?

நண்பா!

உன்னை முதல் முதலாய்
பார்த்த போது
உனக்குள் புரட்சி
ஒன்று இருப்பதைக் கண்டு
நான் என்னை மறந்து
பரவசம் அடைந்தேன்.


புரட்சி என்னும் வார்த்தைக்கு
பொருள் தேடி
அகராதியை புரட்டினேன்.

அதில் உன் முகம் தெரிய
அகராதி புரட்டுவதை
நிறுத்தி விட்டேன்

நண்பா!
திருமணத்திற்கு
தாலி ஒரு
அவமான
சின்னமாகச் சொன்னாயே?

இன்று
உன் காதலியைக் கண்டவுடன்
தாலி ஒரு
அன்புச் சின்னம்
என்று உளறுகிறாயே?

இதுதான் உன் புரட்சியா?

திருமணம்




இரு பறவைகள்

மனம் இனைந்திட்ட

மகிழ்வான நாளில்

பிரதிபலிப்பாம் இன்று

எங்கெங்கோ

மலர்ந்திட்ட

மலர்களின்

மணங்கள்

சங்கமம் ஆன நாளின்று.

Tuesday, November 22, 2005

மானிடமே!










மானிடமே!
நீ தரையை பார்த்து நடந்தால்
ஏதும் தெரியாத பாவி
என்று சொல்லும்
இந்த உலகம்

தலையை நீ
நிமிர்ந்து நடந்தால்
அகங்காரம் கொண்டவர்
என்று சொல்லும்
இந்த உலகம்

அமைதியாக நீ இருந்தால்
ஆக்கிரமிக்கிறாய்
என்று சொல்லும்
இந்த உலகம்

கோபப்பட்டால் நீ
கோபக்காரி
என்று சொல்லும்
இந்த உலகம்

இந்த உலகத்தில்
பாவப்பட்ட ஜீவன்கள்
இருக்கும் வரை
அவர்கள் முன் இருந்தால்
ஒரு பேச்சு
அவர்கள் முன் இல்லாவிட்டால்
ஒரு பேச்சு

அவர்களுக்கு
பொறாமை
போட்டி
இழிவாக உரைத்தல்
மற்றவர்களை
இழக்காரமாகப் பேசுதல்

இது இந்த
பாவப்பட்டவர்கள்
இருக்கும் வரை
வரவேற்பாக இருக்கலாம்

வாழமுடியும்
என்பவர்களுக்கு
நீங்கள் ஒரு
அரங்கேற்ற மேடையாக
இருக்கலாம்.

-சிந்து

Sunday, November 20, 2005

என் நிழலில் நீ வேண்டும்














உன் நினைவுகள்
என்னை தேடும்போதெல்லாம்
உன் வீட்டுக் கதவை
திறந்து பார் - என்
நிழல் உன் முன்நிற்கும்.

உன் நினைவுகள்
என்னை ரசிக்கும்போதெல்லாம்
உன் இதயக்கதவை
திறந்து பார் - என்
நிழல் உன் இதயத்திற்குள்
நிற்கும்

நான்
எந்த நேரத்திலும்
இறைவனிடம்
எனக்காக நான் வரம்
வேண்டியது இல்லை
நான் வேண்டுவதெல்லாம்
உனக்காக - நீ
என் மடி சாய வேண்டும்.

அப்போது ஆசையோடு
உன் தலை கோதி
உன் நெற்றியில் - நான்
அன்பாய் முத்தமிடும் நாள்
வரவேண்டும் என்றுதான்.

அந்த நாள் உன்
கண்கள் என்னிடம்
ரகசியங்கள் பேசும்
உன் நினைவுகள் எல்லாம்
எனக்குள் கவிதைகள் பாடும்

நீ
எப்போதும்
என் நிழலிலே இருக்க வேண்டும்
என் உயிரே.

- சிந்து

Friday, November 18, 2005

காதலா!

















அன்பே!
அன்பு காட்டுகிறேன்
என்று என்னை
அனாதை ஆக்கி விடாதே

ஆறுதல் கூறுகிறேன்
என்று என்னை
அலைய விட்டு விடாதே

அமைதியாக இருக்கிறேன்
என்று என்னை
ஆர்ப்பாட்டம் செய்ய
வழி செய்து விடாதே

ஆரூயிர் காதலியே
என்று என்னை
ஏமாற்றி
அழ வைத்து விடாதே

அரவணைக்கிறேன் என்று
உன் ஆசையை
தீர்த்து விடாதே

காதலிக்கிறேன்
என்று சொல்லி
என் கருவறையை
நிரப்பி விடாதே

நான் அழகு என்று
என் அஸ்தியைக் கரைக்க
வழி செய்து விடாதே

காதலில்
உள்ள மோகத்தில்
கடற்கரைக்குக் கூப்பிட்டு
என்னை கல்லறைக்கு
அனுப்பி விடாதே.

Wednesday, November 16, 2005

வழி தெரியவில்லை



















போவதற்கு கால்கள் இருந்தும்
எத்தனையோ வழிகள் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
போக முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்.....??????

பேசுவதற்கு வாய் இருந்தும்
வார்த்தைகள் இருந்தும்
உரிமை இருந்தும்
பேச முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்.....??????

பார்ப்பதற்கு கண்கள் இருந்தும்
பல நிற வானவில் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
பார்க்க முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்.....??????

கேட்பதற்கு இரு காதுகள் இருந்தும்
எத்தனையோ செய்திகள் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
கேட்க முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்..... ??????

வாழ்வதற்கு வாழ்க்கை இருந்தும்
எத்தனையோ வழிகள் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
வாழ முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்??????

எல்லாம் உன்மேல் வைத்த அன்பினால் தான்
இன்று நான் என்னை இழந்து நிக்கிறேன்
ஒரு நிமிடம் என்னை நீ நினைத்துப்பார்
அப்போது தெரியும் என் நிலை உனக்கு.

Tuesday, November 15, 2005

உறவுகள் பிரிவதில்லை



















பாச உறவுகள்
எங்கெங்கோ
தேசப் பறவைகளாய்
பறக்கின்றன
ஆசையாய் உறவாடத்தான்
அருகினில் இல்லை
நேசமாய் ஒர்மொழி
உரைத்திடத்தான் வகையில்லை.

திசையெங்கும் பிரிந்திடினும்
திகட்டிடாது நம் பாசங்கள் -வன
வாசம்தான் வாழ்ந்தாலும் -மன
வாசல்தனை மூடமாட்டோம்

நேசம் வைத்திடினும்
நெருஞ்சி முள் குத்திடினும்
இரத்தங்கள் வருவதுண்டே
இடங்கள் மாறிடினும்
பாசங்கள் அழிவதில்லை

வாசமிகு பிள்ளைகளாய்
ரோசமிகு குழந்தைகளாய்
சண்டையிட்ட கணங்கள்
சரிந்திடுமா என்ன?

முரண்பட்ட நெஞ்சங்கள் -இன்று
பண்பட்ட நெஞ்சங்களாய் - உறவுகள்
பின்னிட நினைக்கின்றது
தென்பட்ட உறவுகளைத்
தன்னுறவாய் நினைக்கின்றது
வாழ்விலே விழுந்திட்ட
திரைகளால் பாசங்களிலே
எத்தனை வேஷங்கள்

தீருமா இது?
சேருமா உறவுகள்?
வாழுமா பாசம்?
மீளுமா வழி?

படைத்தவன் விளையாட்டு - இது
பயமூட்டும் கிளித்தட்டு
விநயமுடன் வேண்டுகிறேன்
விருப்பமுடன் இணைந்திடுவாய்.

Saturday, November 12, 2005

அவனை நினைத்து

























என் அன்பே!
நீலவானிடையே
நீந்திடும்
அருகில்
நிலவாய் - என் மனதில்
நீயிருந்தபோது
நிம்மதியுடன்
நிறைந்திருந்தேன் நிலத்தில்

ஆனால் இன்று நீயின்றி
நின் வதனம் காண
உனைத்தேடி நீச்சலிடுகின்றேன்

என் நித்திராதேவிதனைக் கலைத்த
நீ இன்று
நிம்மதியோடு உறங்குகின்றாயா?

நீரில் தத்தளிக்கும் மீனாய்
நிலையிழந்து நிக்கிறேன் நான்.

நிமிடங்கள் நாட்களாக
நாட்கள் நிறை மாதங்களாக
நின் சொல் கேட்க காத்து
நின்று களைத்துப் போகிறேன்.

நிதமும் உன் வரவிற்காய் - உப
நிமிடம்தனை ஒதுக்குகின்றேன்
நிச்சயம்
நீ வருவாய் என
நினைத்து
நித்திரை கொள்கிறேன்.

நீ தந்த உறவு என் மனதில்
நீங்காத சுவடு.

Friday, November 11, 2005

மனநோயாளிகள்




மண்ணில்
மரணித்துப் போன தம்
மனங்களை
மரணங்களால் தான்
மலர வைக்க முடியுமென்று
உணர முடியாதவர்கள்

மனிதருக்குள்
எத்தனை
மனிதர்கள்
நினைக்கும் போது
நெஞ்சம் கனக்கிறது

மரணங்களை
மனிதர் அடித்து
விரட்டுவதால் தான்,
மரணங்கள்
மனிதர்களை
தேடுகின்றன

வேதனைகளை
சுமந்து
சலனங்களை
உண்டு பண்ணி
வாழ்வதில் தான்
என்ன பிரயோசனம்?

வாழ்க்கைச் சக்கரத்திலே
உடைந்துபோன
மரத்துண்டுகள்
ஆதாம் ஏவாளின்
வாரிசாக
ஜனனித்த
மாந்தருக்கா
இன்நிலை!

மழலைகள் போன்ற
மனதினை
மலர வைப்பது
இரும்பு சங்கிலியால்
மட்டுமே என்று
உணந்திடும்
மானிடமே!

மழலைகள்



மண்ணில் மலரும்
மரகத வீணைகள்
மணக்கும் போது
மனதில்தான் எத்தனை
மகிழ்வு!

கள்ளமற்ற சிரிப்பு
சொற்களற்ற வார்த்தை
உறுதியற்ற நடை
வஞ்சனையற்ற முகம்
இதுதான் மழலைகளின் உலகம்.

மொட்டாய், மலராய்
பட்டுப் போன்ற கன்னத்துடன்
சிட்டாய்ப் பறந்தடிக்கும்
சிட்டுக் குருவிகள் அல்லவோ
இவர்கள்!

மண்ணும் ஒன்று
உணவும் ஒன்று
பாம்பும் ஒன்று
பந்தும் ஒன்று
என்பது இவர்கள் பார்வை!

கொடிய மனத்திலுள்ள
கடின செயலையும்
மடிய வைக்கும்
பிறை முகங்கள்.

நிலவின் முகத்திலும்
கருமை படியும் - ஆனால்
இவர்கள் மதிமுகங்களில்
கருமை படியுமோ?

யாவரும் விரும்புவது மழலைகள்
தாயாரும் மகிழ்வது மழலைகள்
மழலைகள் வாழ்வின் பேழைகள்.

காதல்


உலக உயிர்களிலே
உலவும் உனக்கு
உருவமில்லை- ஆனால்
உணர்ச்சிகள் உண்டு
உயிரில்லை-ஆனால்
உயிரினுள்
ஊடுருவும் தன்மையுண்டு.

நீ எம்மிடம் வந்தால்
உடன்பிறந்த
உறவுகள் இல்லை
உயிர் கொடுத்த
உற்ற அன்னை இல்லை

உன்னால் எமக்கு
உணவில்லை
உறக்கமில்லை-ஆனால்
உபாதைகள் உண்டு.

நீ எமை பற்றினால்
எம் பார்வை வேறு பாசம் வேறு
பழகிய நட்பும் பகையாகும்
தனிமையே இனிமையாகும்.

பலருள் நீ வந்தாலும்
சிலருள் வேரூன்றுவாய்
சிலருள் மரமாகி
பழம் தருவாய்
சிலருள் முளையிலே
கருகி விடுவாய்
இது விதியின் விளையாட்டா?

காதல் சாதலுக்கு
வரும்முன்
வாழ்தலுக்கு
தயாராக வேண்டும்.